Pages

Tuesday, May 26, 2015

மெகா சீரியல் = மகா கொடுமை

இரண்டாம் உலக போர் சமயத்தில் ஹிட்லரின் சித்திரவதை முகாம் பற்றி அங்கொன்றுமிங்கொன்றுமாய் படித்து இருக்கிறேன். கொடூரமாய் கொல்வதில் இச்சை கொண்டு அந்த முகாம்கள் அமைக்க பட்டதாய் சரித்திர ஆய்வாளர்கள்  நுணுக்கமாய் எழுதி இருக்கிறார்கள். அவை போன்றவை இக்காலத்தில் இல்லை என்று முத்தாய்ப்பாய் சொல்லி வந்தனம் பாடி இருப்பார்கள்

அந்த புண்ணியவான்கள் யாரும் பாலிமர் தொலைகாட்சியில் வரும் ஹிந்தி டப்பிங் சீரியல்களை பார்த்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

இன்று என் வீட்டம்மணி வாரயிறுதி சலுகையாக சாப்பிடுவதற்கு பஜ்ஜி செய்து தருவதாய் சொல்லி என்னை வீட்டு முகப்பறையில் உட்கார்ந்து பஜ்ஜி என்ற தெய்வீக பண்டத்தை கையில் தர படும் வரையில் தொலைக்காட்சியை பார்த்து கொண்டு இருக்கும் படி சொல்லிவிட்டு போனார். வார நாட்களில் அதிக எண்ணெய் பண்டங்களுக்கு வீட்டம்மணி தடை போட்டு உள்ளார் என்பதினால் நானும் ஆர்வம் கொண்டு காத்து கொண்டு இருந்தேன்.

பாலிமர் தொலைகாட்சியில் எதோ தமிழ் மயமாக்க பட்ட ஹிந்தி சீரியல் ஓடிகொண்டு இருந்தது. மெகா சீரியல் என்றாலே மகா கொடுமை என்ற சித்தாந்தத்தில் சன் டிவி சக்தி சீரியல் வந்த நாள் முதலே ஊறி இருந்த படியால் நிலைய அலைவரிசைவை மாற்றலாமென்று எத்தனித்த பொழுது, அந்த செய்கை கொடுக்க படும் பஜ்ஜிகளின் எண்ணிக்கை குறைய காரணமாய் அமையுமோ என்ற தயக்கத்துடன் பாலிமர் தொலைகாட்சியை காண தொடங்கினேன். என்ன இருந்தாலும் கொள்கையை விட பஜ்ஜி தான் எனக்கு முக்கியம்.

அதில் ஒளிபரப்பாகி கொண்டு சீரியலில் மனைவி தனது கணவனை சந்தேக பட்டு இருப்பார். மனைவி என்று வந்து விட்டாலே கணவனை சந்தேக படுவது தானே இயல்பு, இதிலென்ன இருக்கிறது என்று யோசித்து கொண்டு இருந்த பொழுது அக்காட்சியில் இருந்த எல்லா நடிகர்களுக்கும் ஒரு close up shot வைத்தார். ஒன்று இரண்டு பேர் என்றால் கூட பரவாயில்லை. நாட்டில் பாதி ஜனத்தொகை இருப்பார்கள் போலும். என் பக்கத்து வீட்டு சுப்பிரமணிய அங்கிள் கூட இருப்பாரோ என்று தேட ஆரம்பித்தேன். நல்ல வேளை அந்த காட்சி அதற்குள் முடிந்து விட்டது. தேடல் இல்லாத வாழ்க்கை சுவை இருக்காது என்று ஞானிகள் பலர் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இம்மாதிரியான தேடல் தான் அவை என்றால் இப்பொழுதே எம விலாசம் நோக்கி போகலாம். 

அந்த குளோஸ் அப் காட்சிகளில் எதேனும் சிறப்பு அமைந்து விடாதா என்று எதிர் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சியது. எல்லா நடிகர்களும் பொங்கல் சாப்பிட்டு விட்டு வடைக்காக காத்திருக்கும் முக பாவணையிலேயே இருந்தார். ஏமாற்றமும் ஒரு மாற்றமே என்று பாடி கொண்டு எனது பஜ்ஜிக்கான காத்திருப்பில் இருந்தேன். 

அடுத்து ஒரு கதாப்பாத்திரம் "என்னது உன் புருஷனை சந்தேக பட்டீயா.." என்று ஆரம்பித்தார். பிறகு ஊரை தெரிஞ்சுகிட்டேன் பட பாண்டியராஜன் ஏல கடை நகைச்சுவையை ஆளாளுக்கு ஏறக்குறைய அந்த பாதி ஜனத்தொகையும் அதே வசனத்தை திரும்ப திரும்ப சொன்னார்கள். 

பிறகு ஒரு பத்து நிமிடங்கள் அந்த மெகா சீரியலை பார்த்திருப்பேன், பதினொன்றாம் நிமிடத்தில் என் கை அனிச்சையாக தலை முடியை பிய்த்து கொள்ள போனது. 

அதற்கு வீட்டம்மணி பஜ்ஜிகளை தட்டில் அடுக்கி தொட்டுக்க தேங்காய் சட்னி கொண்டு வந்து என்னை காப்பாற்றினார். 

புராணத்தில் சத்தியவானின் உயிரை அவனது மனைவி சாவித்திரி எமனிடமிருந்து காப்பாற்றினார். அதே போல் ஒரு நிகழ்வை என் வீட்டம்மணி நிகழ்த்தியுள்ளார். 

எப்படி தான் இந்த மொழிமாற்று சீரியல்களை பார்த்து கொண்டு மக்கள் இருக்கிறார்களோயென்று தெரியவில்லை.

பஜ்ஜிகளை சூரசம்ஹாரம் செய்த பின் நான் இணைய சேவை செய்ய அறைக்கு வந்துவிட்டேன். 

No comments:

Related Posts with Thumbnails