Pages

Sunday, September 18, 2011

**என் பெயர் ராமசேஷன் - நாடோடி பிம்பங்கள்**

"ஆமாம், ராமசேஷன். கர்நாடகமான ஒரு பெயர்." என்று முதல் வரியில் ஆரம்பித்து "பல்லை உடைத்துக் கையில் கொடுப்பேன், ஜாக்கிரதை" என்று கடைசி வரியில் கதை முடிவதற்குள், நான் ராமசேஷனாகவே வாழ்ந்துவிட்டேன். மற்ற நாவல்களில் எல்லாம் கதைமாந்தர்களுடன் கொஞ்ச நாள் வாழ்வேன், ஆனால் ஆதவன் அவர்கள் என்னை அவரது எழுத்தின் மூலம் என்னை நூற்றி எண்பத்தெட்டு பக்கங்களுக்கு ராமசேஷனாக மாற்றிவிட்டார். புத்தகம் முடித்து மாதங்களான பின்னும், வாசிப்பனுபவ சுவடுகள் என்னை விட்டு போகவில்லை.

கதாவிலாசத்தில் ஆதவனை பற்றி படித்த போது கூட, எஸ்ராவின் எழுத்துநடையில் மயங்கிருந்தேனே தவிர, ஆதவனை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை. பிறகு புத்தக கடையில் சுற்றி வரும் பொழுதெல்லாம் இந்த புத்தகத்தின் அட்டைபடம் என்னை ரொம்ப வசீகரித்திருந்தது, அதற்காகவே வாங்கினேன். கதைக்கும் அட்டை படத்திற்கும் என்ன தொடர்பிருக்க முடியும் என்று அடிக்கடி யோசிப்பேன். வாசித்து முடித்த பின், இந்த படத்தை விட வேறெந்த படமும் இதற்க்கு பொருத்தமாக இருக்க முடியாது என்பதை தெரிந்துக் கொண்டேன்.

நாடோடி பிம்பங்கள் - இந்த பதிவுக்கு ஏற்ற தலைப்பா இது என்றெல்லாம் எனக்கு தெரியவில்லை, ஆனால் எனக்கு பொருத்தமானது. நான் அடையாளங்களை எப்பொழுதும் வெறுப்பவன். வெறும் அப்பாவி மேவியாக இருந்த வரைக்கும் சந்தோஷமா இருந்தேன். ஆனால் பொருளாதார அடிமை வேடமிட்ட பிறகு, தினந்தோறும் புது புது அடையாளங்களை விரும்பமில்லாமல் அணிந்து கொள்கிறேன் . அதிகாரத்தை காட்ட, பணிவை காட்ட........ இன்னும் என்னவெல்லாம் இருக்கிறதோ அதற்கெல்லாம். நான் நல்லவனா என்று தெரியாது ;கெட்டவன் இல்லை. ஆனால் கிளையன்ட்களுக்கு முன்னால் தூய்மையான நெய்யில் செய்த நல்லவன் என்று நடிக்க, அடையாளமற்ற எனக்கு இந்த தற்காலிய பிம்பங்கள் பெரிதும் பயன் படுகின்றன. ஆனால் கூத்து ஆடுபவர், அலங்காரத்தை கலைத்த பின், அந்த பவுடரில் உள்ள நச்சு தன்மையால் அவனது முகத்திற்கு பாதிப்பு வருவது போல், எல்லா பிம்பங்களையும் கலைத்துவிட்டு
வீட்டிற்கு வந்த பிறகும் எனக்கு அன்று அணிந்த பிம்பங்களின் பாதிப்பு அதிக அளவில் இருக்கிறது.

எந்தவித அடையாளமோ, பிம்பமோ இன்றி, தோழமை உணர்வுக்காக சிலரை நாடி செல்வேன், நான் போகும் சமயம் அவர்கள் ஏதோ பிம்பத்தோடு இருப்பதை கண்டு, நொந்து போய் திரும்ப வருவேன். எனது இயல்புகளுடன் யாரிடமும் இயல்பாய் இருக்க முடிவதில்லை. பிறர் அணிந்து கொள்ளும் பிம்பங்கள் குறித்து குழப்பங்கள் / கோவங்கள் எல்லாம் என்னை சூழ்ந்து கொள்ளும். அதை பற்றிய யோசனையாகவே இருப்பேன். ராமசேஷனும் அப்படியே. ராமசேஷனை சுற்றி உள்ளவர்களை பற்றிய அவனது பார்வையில் பேசுகிறது இந்த நாவல்.

மனிதர்கள் எப்பொழுதுமே ஒரே மாதிரி தான். எந்த நிலையிலும் தனது விருப்பங்களை நிலைநாட்ட, இருப்பை தக்க வைத்துக் கொள்ள, பிறர் மத்தியில் முக்கியத்துவம் பெற ; மற்றவர்களை குப்பை தொட்டியாக்கி தங்களது விருப்பங்களை திணிப்பதையே முக்கிய வேலையாக செய்வார்கள். ராமசேஷனை சுற்றியும் அப்படிபட்ட மனிதர்கள் தான். அவனது அம்மா,அத்தை, நண்பர்கள், உறவினர்கள், காதலிகள் என்று எல்லோரும் அவனிடத்தில் ஏதொரு பிம்பத்தோடு பழகுகிறார்கள். அவனது எண்ண ஓட்டத்தில் அதையெல்லாம் கிண்டலும் கேலியுமாய் எதிர் கொள்கிறான். அவனும் சில சமயம் பிம்பங்களை அணிந்து கொள்கிறான், வெற்றியும் தோல்வியும் அடைகிறான்.


பிம்பங்கள் சார்ந்த குழப்பங்களும் அவனுக்கு வருகிறது. எனக்கும் அந்த மாதிர்யான குழப்பங்கள் அடிக்கடி வரும் : யாரிடம் எந்த பிம்பத்தோடு பழகினேன் என்று.

நிறைய பேர் சொல்கிற மாதிரி, இந்த நாவலில் ஏதொரு இடத்தில நம்மை பொருத்தி பார்த்து கொள்ளலாம். அதிலும் கதைக்கு முன்னுரையாக லா.ச. ராமாமிருதம் அவர்கள் "அபிதா"வில் எழுதிருந்ததை போட்டிருக்கிறார்கள் .... அவ்வளவு பொருத்தும்.

"நான் ஏதோ ஒரு விளையாட்டுக்காக நாய் வேஷம் போட்டேனென்று என்னை அந்த வேஷத்திலேயே நிரந்தரப்படுத்தப் பார்க்கிறாள்"... இந்த வரிகள் எனது மன காயங்களை பிரதிபலிப்பு செய்கிறது. அலுவலக நேரத்திற்கு பிறகான நேரங்களில், அல்லது வாரயிறுதி நாட்களில் அலுவலக நட்புகளை சந்திக்கும் பொழுதெல்லாம், அவர்கள் என்னை, நான் போட்டுக்கொள்ளும் அலுவலகதிற்கான பிம்பத்தோடு தான் சந்திக்க விரும்புகிறார்கள். பிம்பங்கள் என்ற குப்பை தொட்டியை நான் எப்பொழுதும் சுமப்பதில்லை என்று அவர்களுக்கு புரிய வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். அதனால் இப்பொழுதெல்லாம் யாருக்கும் விளக்குரை தருவதில்லை... இன்ஸ்டன்ட் பிம்பம் அணிந்து கொள்கிறேன்.

மொத்தத்தில் - எல்லோரும் படிக்க வேண்டிய நூலிது

"ஒரு நகர்ப்புற மத்திய தர இளைஞனின் கண்களின் வழியே நவீன வாழ்நிலையின் பாசாங்குகளும் முகமூடிகளும்
வேட்கைகளும் சித்தரிக்கப்படும் என் பெயர் ராமசேஷன் ஆதவனின் புகழ் பெற்ற நாவல். சுய நிரூபணத்திற்கான பரிதவிப்பும் அடையாளத்
தேடலும் கொண்ட இளமையின் வண்ணம் மிகுந்த சித்திரம் இந்தநாவல்." புத்தக பின் அட்டையிலிருந்து.

இந்த நாவலை படிக்கும் பொழுது ஆதவன் நமது ஆழ்மனதில் இருக்கும் சில காயங்களுக்கு தனது எழுத்துக்களின் மூலம் மயிலிறகில் மருந்து தடவிகிறார். வண்ணங்கள் ஆயிரம் அழகாய் இருந்தாலும், அவைகளை பார்த்து ரசிக்க முடியுமே தவிர, அதிலோன்றாக முடியாது, ஆனால் ஆதவன் நம் கையை பிடித்து ஒரு அற்புதமான வாசிப்பனுவ பயணத்திற்கு கொண்டு செல்கிறார். அதில் நம்மை போலவே ஏமாற்றங்களையும், எரிச்சல்களையும் ராமசேஷன் சந்திக்கிறான்.

ஆதவனை பற்றி ..... அவரது படைப்புகளில் இதை மட்டும் வாசித்திருக்கிறேன் :::: இப்பொழுது ஆதவன் சிறுகதை தொகுப்பை வாசித்து கொண்டிருக்கிறேன். அதனால் ஆதவனை பற்றி அசோகமித்திரன் "1960 , 70 களில் இந்திய நகரங்களில் இளமைப் பொழுதைக் கழித்த, படித்த, மத்தியதர வர்க்கத்தினரின் பிரத்தியோக ஆசை - அபிலாஷைகளையும் சோகங்களையும் நிராசைகளையும் ஆதவனைப் போல யாரும் தமிழில் பிரதிபலித்ததில்லை." என்கிறார்.

ஆதவனை பற்றி இந்திரா பார்த்தசாரதி " நான் அவனை பாதித்திருப்பது போல, ஆதவனும் என்னை மிகவும் பாதித்திருக்கிறான். இதை நான் பெருமையாகச் சொல்லிக்கொள்ள முடியும்" என்கிறார்.

ஆதவனின் மற்ற படைப்புகள் பற்றி எனக்கு தெரியாது, ஆனால் "என் பெயர் ராமசேஷன்" கொண்டாடப்பட வேண்டிய ஓன்று. எனது கல்லூரி காலத்திலையே இந்த நாவல் எனக்கு கிடைத்திருந்தால், வாழ்க்கையின் வெறுமையான சில பக்கங்களை தவிர்த்திருக்கலாம். கல்லூரி படிப்பவர்கள் எல்லோரும் படிக்க வேண்டிய ஓன்று, ஏனென்றால் ராமசேஷனும் கல்லூரியில் படிக்கிறான். ஆனால் எனக்கென்னவோ இன்றும் எல்லா கல்லூரிகளிலும் ராமசேஷன் உலவி வருவதாகவே தோன்றுகிறது.

நாவலை படிக்கும் பொழுது , பிடித்த ஜன்னலோர ரயில் பயணம் போல் இருந்தது. கடைசி பக்கம் வந்த பொழுது, அய்யோ நாவல் முடிய போகிறதே, ராமசேஷனுடன் இனிமேல் பயணிக்க முடியாதா ?? என்றெல்லாம் மனதிற்கு வேதனை பட்டேன்.

வேறென்ன சொல்ல .... நாவலை படித்து முடித்த பிறகு I was completely swept off my feet .

வெளியீடு - உயிர்மை பதிப்பகம்
விலை - ரூ.120

2 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

படிக்கிறவங்க யார் என்ன சொல்வாங்கன்னு யோசிக்காம நேர்மையா பதிவு பண்ணி இருக்கீங்க மேவி.. நல்லா வந்திருக்கு..:-))

கிருஷ்ண மூர்த்தி S said...

ஒரு புத்தகம் அல்லது எழுத்து எப்படி வாசகனுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது தான் முக்கியமான அம்சம் மேவி!வாசிப்பதில் தன்னைப் பொருத்திப் பார்க்க முடிவது முதல் நிலை!அந்த வாசிப்பையும் தாண்டி யோசிக்க முடிகிற அனுபவம் கிடைத்தால் அதையே வாசிப்பின் உச்சமாகச் சொல்லலாம்.

என்பெயர் ராமசேஷன் ஒரு நல்ல புத்தகம் தான்!அதைவிட, உங்களை இப்படி எழுத வைத்திருப்பதே எழுத்தாளரின் நிஜமான வெற்றி!

Related Posts with Thumbnails