Pages

Monday, September 27, 2010

அப்பாவின் மீசை

நினைவு வந்த நாளில்
இருந்தே அப்பா மீசையோடு தான்
சிறு வயதில் வேறயாருடைய மீசையும்
அப்பாவின் மீசை போல் இருந்ததில்லை ...

நீங்கள் என் அப்பாவை பார்த்ததில்லை
அதனால் அவரது மீசையையும்
நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்...

கம்பீரத்தின் அடையாளமாய்
மேல் உதட்டின் மேல
சுவாசத்தின் காவலர்களாய்
இடது பக்கமும் வலது பக்கமும்
சம சீராய் வளர்ந்துவிட்ட முடிகள்
கருப்பு வண்ணம் கொண்ட முடிகள்
உணர்சிகளை அப்பா வெளிகாட்டும்
பொழுது : அதன் வண்ணங்களும் மாறும்

கோபத்தின் பொழுது சிகப்பாய்
சிரிப்பின் பொழுது நீலமாய்
அந்த கருப்பு மீசையின் வெளிபாடுகள்
ஆச்சரியம் ஒன்றே எனக்கு

முடிகளுக்கு வாசனை இல்லை என்று
நான் படித்த அறிவியல் சொன்னாலும்
அது அப்பாவின் மீசைக்கில்லை என்று
தொழிற்சாலையில் இருந்து வந்த அப்பாவை
ஓடி சென்று அணைத்த பொழுது
வேர்வை வாசத்துடன் மீசையின் வாசத்தையும் உணர்ந்தேன்

சலூனில் அப்பாவின் மீசைக்கு அருகே கத்தி கத்திரி வரும்
பொழுதெல்லாம் கடவுளை ஆயிரம் முறையாவது
வேண்டிருந்திருப்பேன் : அப்பொழுதெல்லாம்
கடவுள் நல்லவராய் தான் இருந்தார்

எல்லா பிள்ளைகளை போல தான்
எனக்கும் அறிவியலின் புரியாத புதிர்களில்
ஒன்றாக இருந்தது அப்பாவின் மீசை.

ஒரு சமயம் தாத்தா இறந்த
செய்தி கேட்டு அப்பா அழுதார்
மீசையும் அழுதது.
அப்பா அழுவாரா ???
அப்பா அழுதுவிட்டார் என்ற அதிர்ச்சியே
அவரது மீசை மீதான பிம்பம் உடைந்து விடுமோ
பயத்தில் ஓடிவிட்டேன்.

ஊர் போய் சேரும் வரை
அப்பாவை நேர் கொண்டு பார்க்கவில்லை
அப்பாவின் மீசை தரும் தைரியத்தை
கொஞ்ச நேரம் அம்மாவின் முந்தானை
தந்து கொண்டு இருந்தது

ஊர் மக்கள் ; சொந்தம் ; குடும்ப நண்பர்கள்
என்று நிறைய ஆண்கள் இருந்தார்கள் அங்கு
வித விதமான மீசைகளோடு
எந்த மீசையும் அப்பாவின் மீசையை
போல் அழகு இல்லை ...

சிறுவர்களான எங்களை
இருட்டு அறையில் தூங்க வைக்க பட்டோம்

இரவில் தீடிரென்று வந்த சூரிய வெளிச்சம் போல்
கதவை திறந்து கொண்டு வந்த பெரியம்மா
எங்களை எழுப்பி கையோடு அழைத்து சென்றார்.
ஏன் எதற்கு எங்கே என்று கேட்பதற்குள்
மூன்று அறைகள் தள்ளி இருந்த அறைக்குள்
கொண்டு செல்ல பட்டோம் .

அங்கே தாத்தாவின் தலையை பிடித்த மாதிரி
அப்பா நின்று இருந்தார் : கொஞ்சம் வித்த்யாசமாக
தெரிந்தார்.

ஐந்து நிமிடங்கள் புரியாத புதிருக்கு
காணாமல் போன மீசை பதிலாய்

கூட்டத்தில் எல்லோருக்கும் மீசை இருந்தது
அப்பாவுக்கு இல்லை : இருந்தாலும் அழகு இருந்தது
அது நான் ரசித்த அழகில்லை.

புரியாமல் பக்கத்தில் நின்ற
பெரியம்மாவை கேட்ட பொழுது
"தாத்தா உங்க அப்பாவோட மீசையையும் சேர்த்து சாமிகிட்ட கொண்டு போயிட்டாரு"
புரியாமல் தாத்தாவை வெறுத்தேன்.

Sunday, September 19, 2010

கலவை - எண்ணங்கள்

நடிகர் முரளி - மக்கள் உணர மறந்துவிட்ட ஒரு சகாப்தம்.

முயல் ஆமை கதையில் நாம் என்றாவது ஜெயித்த ஆமையின் வெற்றியின் பாத சுவடுகளை பற்றி கவலை பட்டு இருக்கிறோமா ?? ?

இங்கே ரசிப்பு தன்மை என்பது பந்தய குதுரையின் மேல் பணம் கட்டுவது போலாகிவிட்டது.

மனுஷன் உயிருடன் இருக்கும் பொழுதெல்லாம் யாரும் கவனிப்பதில்லை. மக்களுக்கு இல்லாத ஒன்றின் மேல் தான் அதிகமான விருப்பும் இருக்கிறது. புதிய ஒன்றை ஒருவன் விரும்பும் பொழுது, அவன் ஏற்கனவே விரும்பி கொண்டிருந்த பொருளின் மீதான விரும்பம் காரணமே இல்லாமல் குறைகிறது : நிலையான விருப்பம் இல்லாத மனிதனுக்கு என்றுமே அமைதி இல்லை.

ரசிப்பு ஒப்பீடுகள் தான் தமிழ் சினிமாவின் மிக பெரிய எதிரி. ஆனால் ஒரு விஷயத்தை ஏற்று கொள்ள தான் வேண்டும் : ரசிபதற்க்கு என்று சினிமாவில் அதிகமில்லை.

இதை ஏன் சொல்கிறேனென்று எனக்கு தெரியவில்லை.

நடிகர் முரளியை எனக்கு ரொம்ப பிடிக்கும் : என்ன காரணம் என்று தெரியாது.

அவர் இறந்த செய்தி கேட்டன்று , அவர் நடித்த இதயம் படத்தை மீண்டும் ஒரு முறை பார்த்தேன்.

= = = = =
கொஞ்ச நாளை எனக்கு எழுத்தாளர் தேவன் மீதான பித்து அதிகமாகி கொண்டே போகிறது. எழுத்தில் அப்படி ஒரு சுவாரசியம். மை ஊற்றி எழுதினாரா இல்லை மயக்க போடி போட்டேளுதினாரென்று தெரியவில்லை : நேரம் காலம் போவதே தெரியவில்லை. ஸ்ரீமான் சுதர்சனம் படித்தேன், பிறகு அவரெழுதிய சிற்பல கட்டுரை மற்றும் சிறுகதை தொகுப்புகளை படித்தேன். எழுத்துக்களோடு வாசகனை வாழ வைக்கும் சிறந்தவர்களில் அவருமொருவரென்று சில நாட்கள் முன்னர் தானுணர்ந்து கொண்டேன். தற்பொழுது துப்பறியும் சாம்புவின் சேட்டைகளை ரசித்துக்கொண்டிருக்கிறேன் .

= = = = =
நான் பொதுவாய் "தொல்லை" காட்சியை அதிகம் பார்பதில்லை. அதனாலே பல நல்ல நிகழ்ச்சிகளை தவற விட்டிருக்கிறேன், அதில் நாளைய இயக்குனரும் ஓன்று. அதிலும் நலனின் குறும்படங்களிருக்கும் குறும்பு தனத்தை மிகவும் ரசித்தேன், அவைகளை யூடுபில் ( YOUTUBE ) பார்த்தபொழுது. நிச்சயம் நலன் சினிமா துறையில் பெரிய ஆளாய் வருவாரென்று நம்புகிறேன்.

= = = = =
வெற்றி - இந்த எண்ணம் ஒருவனின் மனதிற்குள் வரும் பொழுதே, மற்றொருவன் தோல்வி அடைந்தால் தான் ஒருவன் வெற்றி பெற முடியும் என்ற எண்ணம் வருகிறது, மக்கள் வெற்றியின் இலக்கணத்தையே மாற்றிவிட்டார்கள். போட்டிகள் நிறைந்த உலகத்தில் யாரும் WIN - WIN STRATEGY கையாள்வதில்லை.

என்னை கேட்டால் வெற்றி அடைவதற்கும் சிறப்பாக செயல் படுவதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர வேண்டும்.

= = = = =
ஏற்கனவே நானெழுதிய "தேவதையின் கை" யின் பாதிப்பிலிருந்தே நானின்னும் வெளிவரவில்லை. அதற்குள் அடுத்த காதல் கதைக்கான கரு உதயமாகி விட்டது. "கம்ப்யூட்டர் கிளாஸ்" இது தான் கதையின் தலைப்பு. நான் இளநிலை கல்லூரி வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு ஒரு வருடம் வெட்டியாகயிருந்தேன், அப்பொழுது நடந்த ஒரு சம்பவத்தை வைத்து எழுத போகிறேன். சுவையாக இருக்குமென்று நம்புகிறேன். அதிலொரு வசனம் இப்படி வருகிறது "IS CAMERA CELL PHONE THERE ?? SAY TRUE OR FALSE ...." (இனிமேல் கடவுளே வந்தாலும் தமிழர்களை முடியாது)

= = = = =
கொஞ்ச நாள் முன்பு நான் 1960 யில் வெளிவந்த "PEEPING TOM " என்றொரு படத்தை பார்த்தேன். மனநிலை சார்ந்த திகில் படம் அது. அந்த படத்தில் இருக்கிற கதையே ஓரிரு வரிகள் தான், அதனால் கதையை சொல்ல விருபவில்லை. ஆனால் பயத்தோடு ஒவ்வொரு பெண்ணையும் கொலை செய்யும் இடமாக இருக்கட்டும், கடைசியில் கதாநாயகியை கொள்ள மனமில்லாமல் தன்னை தானே மாய்த்து கொள்ளும் இடமாக இருக்கட்டும் ..... அதை நீங்களே பார்த்து கொள்ளுங்களேன்.

= = = = =

THE DARK ROOM என்று ஒரு ஆங்கில நாவலை படித்தேன் - இது தமிழிலும் இருட்டு அறை என்று விகடன் பதிப்பகத்தின் முலம் வெளி வந்திருக்கிறது. அந்த கால குடும்ப தலைவியை பற்றின்ன கதை. ஏக்கம், அதன் முலம் அவள் அடையும் ஏமாற்றம், தலைவனை கவர எடுக்கும் முயற்சிகளில் தோல்வி, தலைவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு, அதனால் அவள் எடுக்கும் முடிவு : அதில் அவள் அடையும் தோல்வி : அதனால் வேறு வழி இல்லாமல் மீண்டும் குடும்ப சிறைக்கே வரும் அந்த குடும்ப தலைவியின் மன போராட்டங்களை ரொம்ப வர்ணனை இல்லாமல் காட்சிகளின் மூலமாகவே சொல்லிருக்கிறார் RK நாராயண்.

இதே போன்ற மனநிலையில் இருக்கின்ற ஒரு தலைவி எடுக்கும் விபரீத முடிவை கதையாக வைத்து தான் ALEXANDRA PROJECT படத்தை எடுத்தார்களென்று நண்பன் சொல்ல கேட்டிருக்கிறேன்.


= = = = =

எண்ணியதெல்லாம் எழுதிவிட்டேனாயென்று தெரியவில்லை. நினைவிலிருந்தவற்றை எழுத்துக்களில் கொண்டுவர நேரம் தானில்லை. இன்னும் எழுதிருப்பேன் சுவை குறைந்து விடுமோயென்ற ஐயத்தில் (இப்பொழுது மட்டும் இருக்கா ??) இதோடு நிறுத்தி விடுகிறேன்.

KEEP SMILING


ENJOY LIVING

பிறகொரு சமயம் பார்போம்

Tuesday, September 7, 2010

மிட்டாய் வீடு - பார்க்க வேண்டிய குறும்படம்


கல்யாணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்க படுகிறது. ஆனால் அது காதல் திருமணமாக இருந்தால் சொர்க்கமாய் இருக்கிற வீட்டில் நிச்சயிக்க படுகிறது. முதல் முதலில் காதலியை வீட்டில் அறிமுக படுத்தும் பொழுது, அம்மா - காதலி இருவருக்கும் என்ன மாதிரியான மனநிலைமை இருக்குமென்று நல்ல எடுத்து காட்டிருக்கிறார் இயக்குனர் ("காதலில் சொதப்புவது எப்படி" எடுதரே அவரே தான் ..... )

திரு. பாலாஜி மற்றும் அவருடைய டீம் - வாய்ப்புகளே இல்லை ; பாராட்ட வார்த்தைகளில்லை.

பாலாஜியோட குறும்படங்கள் மேல எனக்கொரு சொல்ல முடியாத பிரியம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன் - பொதுவாய் ரொம்ப பார்த்து பார்த்து தான் யூடுபில் சில பல சேனல்களை follow செய்வேன் - ஆனால் கொஞ்சம் கூட யோசிக்காமல் இந்த குறும்படத்தை பார்த்த உடனே subscribe பண்ணிட்டேன்.

இயக்குனர் கொஞ்சம் குறும்புகாரர் போலிருக்கு - அது அங்கொன்றும் இங்கொன்றுமாய் காட்சிகளில் தெரிகிறது, குறிப்பாய் "இதோட போதுமே" என்று பையன் அப்பாவை பார்த்து சொல்லும் பொழுது. அதென்ன காட்சி ??? குறும்படத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

குறும்படம் ஆரம்பித்ததில் இருந்து எட்டாவது நிமிஷம் வரைக்கும் இதொரு நகைச்சுவை பட பதிவென்றே நினைத்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தேன்..... ஆனால் அதன் பிறகு தான் நிகழ்ச்சியான வசன அமைப்புகளிலும் காட்சி அமைப்புகளிலும் இயக்குனர் நம்மை பெரிதும் கவர்கிறார்.

அதிலும் அந்த காதலியின் பார்வையிலிருந்து கதை சொல்லப்படும் நிமிஷம் - நன்றாக சிரித்துவிட்டேன்.

என்னை சிரிக்க வைத்த மற்றொரு காட்சி - ஆரம்ப காட்சி தான் ( இயக்குனருடைய குறும்பின் உச்சமென்றே சொல்லலாம்).

இந்த குறும்படம் உணர்த்தும் மற்றொரு விஷயம் - நிதர்சன வாழ்வில் நாம் நம்முடைய மூளை வேலை செய்யும் முன்னரே, நம்முடைய உணர்வுகளை வெளிகாட்டி விடுகிறோம், அது மற்றவர்களை காயபடுதும் என்று அறியாமல். சுயநல கோவங்களுக்கு என்றுமே மதிப்பில்லை .

இந்த குறும்படத்தை பற்றி இன்னும் சொல்ல நிறைய தோன்றுகிறது, ஆனால் நேரமில்லாததால் இதோடு முடித்து கொள்கிறேன். என்னால் ஒன்றை மட்டும் நிச்சயமாக சொல்ல முடியும் - இது உங்களுக்கொரு நல்ல ரசிப்பனுபவத்தை தருமென்பதை.

Related Posts with Thumbnails